Top Ad 728x90

புரிந்துவிட்டது உன் ஜனனமே

veltech logo
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
தாம்பத்தியம் இல்லை – ஆனாலும் நான் தாயாகப் போகிறேன்
களவு இல்லை – ஆனாலும் நான் கருவை சுமந்துகொண்டிருக்கிறேன்
மன்னவன் இல்லை  - ஆனாலும் நான் மாசமாய் உள்ளேன்
முத்தங்கள் இல்லை – ஆனாலும் நான் மூழ்காமல் இருக்கிறேன்
மகரந்தச்சேர்க்கை இல்லை – ஆனாலும் நான் மலரொன்றை மடிசுமக்கிறேன்
அன்பானவன் இல்லை – ஆனாலும் நான் அன்னையாகப் போகிறேன்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
தாலிக்கட்டியவனின் தழுவல்கள் இல்லை – ஆனாலும் நான் தாய்மை அடையப்போகிறேன்
கரம்பிடித்த கணவன் இல்லை – ஆனாலும் நான் கர்பமாய் இருக்கிறேன்
மணந்துகொண்ட மன்மதன் இல்லை – ஆனாலும் நான் மசக்கையாய் இருக்கிறேன்
காமத்து இன்பம் இல்லை – ஆனாலும் நான் பிரசவத்துன்பத்திற்கு தயாராயிருக்கிறேன்
சீண்டல்கள் சிறிதும் இல்லை – ஆனாலும் நான் சிசுவொன்றை சுமந்துக்கொண்டிருக்கிறேன்
தாலிக்கொடி கழுத்தில் இல்லை – ஆனாலும் நான் தொப்புள்கொடிமூலம் தொடர்பிலிருக்கிறேன்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
பள்ளியறை பாலுணர்வுகள் இல்லை – ஆனாலும் நான் பத்துமாதம் சுமந்துனை பிரசவிக்கப்போகிறேன்
விந்து என்னவனுடையது இல்லை – ஆனாலும் நான் வயிற்றை அடிவரை தடவிப்பார்த்துக்கொள்கிறேன்
சினைப்பை முட்டை எனதில்லை – ஆனாலும் நானதை கருப்பையில் கவனமாய் காப்பாற்றிவருகிறேன்
கருவிலிருக்கும் சிசுஎனதில்லை – ஆனாலும் நான் அதற்கும் சேர்த்து சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
கணவனின் பசிக்கு விருந்தாகவில்லை – ஆனாலும் நான் ருசியானயுணவை உனக்கும்சேர்த்து புசித்துக்கொண்டிருக்கிறேன்
நிர்வாணமாய் நாயகன்முன் நிற்கவில்லை – ஆனாலும் நீயென் பனிக்குட நீரில் நீந்திக்கொண்டிருக்கிறாய்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
ஈரைந்து மாதங்கள் கருப்பையை வாடகைக்கு ஈன்றிருக்கிறேன்
கருவொன்று  குடியிருக்க குத்தகைக்கு நானதை கொடுத்திருக்கிறேன்
குழந்தையாய்மாறி குதிக்கும்வரை அது குடித்தனம்செய்ய கையெழுத்திட்டிருக்கிறேன்
இளம்விதவை நான் வறுமையால் வாடகைத்தாயாய் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
பத்துமாதம் சுமந்த எனக்கு உன் பாலினம் கூட தெரியப்போவதில்லை
மெல்லமெல்ல எனக்குள் வளர்ந்த உந்தன் மெய்நிறம் நான் அறியப்போவதில்லை
என்னுள் நீந்திக்கொண்டிருந்த உந்தன் நிழல் கூட என்மேல் படப்போவதில்லை
தொப்புள்கொடியை துண்டித்த பின் உன் சொந்தம் எனக்குத் தொடரப்போவதில்லை
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
பார்த்துப்பார்த்து வளர்த்த உனைநான் பார்க்கக்கூட முடியாது
தொப்புள்கொடி சொந்தம் உனைநான் தொடக்கூட முடியாது
முக்கியெடுத்த முத்து உனைநான் முத்தம் கொடுக்கமுடியாது
கட்டித்தங்கமாய் காத்த  உனைநான் கட்டி தழுவவும்முடியாது
தாம்பத்தியமின்றி பிறந்த உனக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாது
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
ஒப்பந்த காலம் முடியும்வரை என்னுள்லே நீ ஒன்றாயிருக்கப்போகிறாய்
ஒப்பந்தம் முடிந்தபின் நமக்குள் ஒன்றுமில்லையென்று நீ சொல்லப்போகிறாய்
தரணியை தொட்டவுடன் எனைவிட்டு தொலைதூரம் நீ பயணிக்கப்போகிறாய்
பிறந்தபின் உன் பெற்றோருடன் கடல்கடந்து நீ பறந்துச்செல்லப்போகிறாய்
பறக்கையிலேயே நம் பத்துமாத பந்தத்தை நீ மறந்துச்செல்லப்போகிறாய்
பேசிய ரொக்கத்தை கொடுத்துவிட்டு பேசாமலேயே நீ போகப்போகிறாய்
உன் பிறப்பால் எனக்கு பிரியாவிடை நீ தரப் போகிறாய்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
அரிந்துகொண்டேன்நான் உன் பிறப்பே நம் பந்தத்தின் இறப்பென்று
தெரிந்துகொண்டேன்நான் உன் பிரசவமே நமக்கு பிரிவு உபசாரவிழாவென்று
ஜெயசந்திரன்

0 Comments:

Post a Comment

Top Ad 728x90