அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று உன் வருகையை வரமாய் வேண்டிநின்றனர்
இன்று உன் வருகையை சாபமாய் சாடுகின்றனர்
அன்று உன் வருகை அனைவருக்கும் ஆரவாரம்
இன்று உன் வருகை எங்களுக்கு அவமானம்
அன்று நீ வந்தவுடன் எத்தனை அரவணைப்பு
இன்று நீ வருவதால் எத்தனை அருவெறுப்பு
அன்று நீ வந்தவுடன் இன்புற்றாள் ஈன்றெடுத்தவள்
இன்று நீ வருவதால் துன்புறுகிறான் துணைநிற்பவன்
அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று உன் வருகைக்கு எத்தனை பிரார்த்தனைகள்
இன்று நீ வராமலிருக்க எத்தனை பரிகாரங்கள்
அன்று உன் வருகையை எதிர்நோக்கி ஏங்கியிருந்தனர்
இன்று நீ வராமலிருக்க குலசாமிக்கு கும்பிட்டுக்கொண்டனர்
அன்று உன் வருகைக்கு அன்னையின் கைவைத்தியம்
இன்று நீ வராமலிருக்க அத்தையின் கைவைத்தியம்
அன்று தினந்தினம் வருவாயாவென்று பெற்றோருக்கு பேரார்வம்
இன்று மாதாமாதம் வந்துவிட்டாயேவென்று என்னவனுக்கு ஏமாற்றம்
அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ வராததால் அன்னைக்கு அவமானம்
இன்று உன் வருகையால் அன்பானவனுக்கு அவமானம்
அன்று காலத்தில் வராததால் தாய்க்கு தலைவலி
இன்று காலம்தாழ்ந்தும் வருவதால் தாலிகட்டியவனுக்கு தலைகுனிவு
அன்று நீ வராததால் கன்னித்தன்மை கிடைக்கப்பெறவில்லை
இன்று உன் வருகையால் தாய்மைத்துவம் தரப்படவில்லை
அன்று நீ வராததால் மங்கையில்லை என்றனர்
இன்று உன் வருகையால் மலடிநான் என்கின்றனர்
அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ வந்தவுடன் சீரெனக்கு செய்தனர்
இன்று நீ வராமலிருந்திருந்தால் சீமந்தம் செய்திருப்பர்
அன்று நீ வந்தபோது வளையல்கள் அணிவித்தனர்
இன்று நீ வராமலிருந்திருந்தால் வளைகாப்பு செய்திருப்பர்
அன்று அமர்ந்துவிட்டேனா என்று அம்மாவிடம் கேட்டனர்
இன்று அப்பாவாகிவிட்டாயா என்று அவரிடம் கேட்கின்றனர்
அன்று காலத்தில் நீ வராததால் கலக்கம்
இன்று கலந்தும் நீ வருகிறாயேவென்று கண்ணீர்
அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ காண்போருக்கெல்லாம் கதாநாயகியாய் காட்சிதந்தாய்
இன்று நீ வீட்டாருக்கு வில்லியாய் வெளிப்படுகிறாய்
பருவத்தில் வராததால் என் பெண்மை பரிகசிக்கப்பட்டது
ஆண்டுகளாகியும் வருவதால் அவர் ஆண்மை அசிங்கப்படுகிறது
அன்று நீ வந்தவுடன் ஊருக்கே விருந்து
இன்று நான் விருந்தாகியும் எனக்கின்று மருந்து
பருவத்தில் நான் பூப்பெய்யாததால் பெற்றோருக்கு பேரவமானம்
மணந்துநாளாகியும் நான் மசக்கையாகாததால் எங்களுக்கு மனவேதனை
அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
தாய்மையடைய தாமதமாகும் தம்பதிகளுக்கோர் தாழ்மையான வேண்டுகோள்
இனியும் காத்திராமல் இன்றே மருத்துவரிடம் ஆலோசிக்கலாமே
ஆன்டுகளாய் பிரசவிக்காதவர்கள்கூட அறிவியலின் துணையால் ஆனந்தமடைந்துள்ளனர்
மனந்துவண்டவர்கள்கூட மகத்தான மருத்துவத்தால் மாதங்களில் மகப்பேறடைந்துள்ளனர்
மனிதமுயற்சியால் முடியாதவைகள்கூட மருந்துகளால் மாயமாய் அரங்கேறிகொண்டிருக்கிறது
சோதனைக்குழாய் குழந்தை, வாடகைத்தாயென்று சாதனைப்பல சாத்தியமாயுள்ளது
இதுவும் கடந்து போகுமென்று நம்பிக்கையுடன் நடக்கலாமே
மருத்துவத்தால் முடியாவிடில் தத்தெடுப்பதொன்றும் வெகு தொலைவிலில்லையே
- ஜெயச்சந்திரன்
தாய்மை, ஜெயசந்திரன்
அன்றும் இன்றும்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment